என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்"
குடியாத்தம்:
குடியாத்தம் போஜனாபுரம் ஊராட்சி மேல்சுந்தரகுட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குடியாத்தம் மேல்பட்டி செல்லும் சாலை உள்ளிகூட்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்த்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சி சென்றாம் பாளையம் கிராமத்தில் கடந்த 18 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை 7.30 மணியளவில் சென்றாம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் அரசு பஸ் வந்தது. அதனை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் தாஸ், அம்பராம் பாளையம் கூட்டு குடிநீர் திட்ட உதவி பொறியாளர் திருமலை சாமி, கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தான் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.
இன்று முதல் முறையாக தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று தண்ணீர் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் இச்சிப்புத்தூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் நீருக்காக அப்பகுதி மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் தணிகை போளூர் பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.
தகவலறிந்து வந்த, அரக்கோணம் தாலுகா போலீசார் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசப்படுத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி அருகே அதியமான் கோட்டையை அடுத்த தேவரசம்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடிநீரை பயன்படுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் குழி தோண்டினர். அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை சரிசெய்யாமல் அவர்கள் அப்படியே குழியை மூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததை குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை தேவரசம்பட்டி அருகே உள்ள சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகிக்க உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






